Skip to main content

மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு... ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசம்!   

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

cuddalore district manimuktha river flood peoples


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (05/01/2021) இரவு பொழிந்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் வடிகால் இல்லாத பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. 

 

விருதாச்சலம் அடுத்த கம்மாபுரம், ஆலடி, ஊ.மங்கலம், கவணை, கருவேப்பிலங்குறிச்சி, சத்தியவாடி, கார்மாங்குடி, மேலப்பாளையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், அப்பகுதியில் சம்பா சாகுபடிக்காக நடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

 

கள்ளக்குறிச்சி பகுதியில் பொழிந்த கனமழை காரணமாக மணிமுக்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரும், கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஓடைகளில் இருந்து மணிமுக்தாறுக்கு வரும் தண்ணீர் என மொத்தம் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேமாத்தூர் அணையிலிருந்து மணிமுக்தாற்று திறந்துவிடப்பட்டுள்ளது. 

 

இந்த தண்ணீரானது மணிமுக்தாற்றில் வந்து கொண்டிருப்பதால் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள ஓடைகளில் இருந்து தண்ணீர் வெளியேறி மணிமுக்தாற்றில் கலப்பதால் விருதாச்சலம் கார்குடல் அணைக்கட்டிலிருந்து 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை மணிமுக்தாற்றில் வெளியேறிக்கொண்டிருக்கிறது. மணிமுக்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை விருத்தாசலம் பாலத்தில் நின்றபடி பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். 

cuddalore district manimuktha river flood peoples

 

கடந்த சில வருடங்களாக ஆற்றில் தண்ணீர் வராத நிலையில் திடீரென வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வெள்ளப்பெருக்கைக் கண்டு ரசித்தனர்.  

 

இதேபோல் வெள்ளாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தே.பவழங்குடி, ஒட்டிமேடு, கோட்டுமுளை, கார்குடல், குமாரமங்கலம், கம்மாபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆற்றில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரை நடவு செய்யப்பட்டிருந்த அனைத்து வயல்களும் தண்ணீரில் மூழ்கி கடல் போல காட்சியளித்தன. 

 

மழை தொடர்ந்து நீடித்தால் கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து பவழங்குடி, தேவங்குடி வரை மணிமுக்தாறு மற்றும் வெள்ளாற்றிற்கும் இடையே உள்ள சுமார் 10 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் அவ்வப்போது ஆற்றை பார்வையிட்டு தண்ணீர் அளவைக் கண்காணித்து வருவதுடன் ஆற்றில் இறங்கி குளிக்கவும், துணி துவைக்கவும் வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வேறு இடங்களுக்கு சென்று பாதுகாப்பாக தங்குமாறு எச்சரித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்