
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து புகார் அளிக்கப்பட்ட மறுநாளே காணாமல் போன சிறுமி வீடு திரும்பி உள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அதிர்ச்சி தகவல் வெளியானது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சமூக வலைத்தளம் மூலம் தனக்குப் பழக்கமான 7 இளைஞர்கள் குனியமுத்தூர் பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு அறை எடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உக்கடம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 7 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழ்நாடு, முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது. ‘குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்’ என்று சொல்லும் முதல்வர், குற்றத்தைத் தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?.
தனக்கு தானே ‘அப்பா’ என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா?. இவரின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு?. பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.