
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் (18.02.2024) நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு கூடியது.
பிரதமர் மோடி தலைமையிலான இந்த தேடுதல் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் பரிந்துரையின் படி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஞானேஷ் குமாரை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முறைப்படி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நாளை (19.02.2025) பதவியேற்க உள்ளார். முன்னதாக 2023ஆம் ஆண்டு புதியதாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் தான் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் மூத்த அமைச்சர் ஆகியோர் கொண்ட குழுவானது தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் கூட்டத்தின் போது, நான் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் ஒரு மறுப்புக் குறிப்பை வழங்கினேன், அதில்,‘அரசின் நிர்வாகக் குறுக்கீடு இல்லாத ஒரு தன்னாட்சியான தேர்தல் ஆணையத்தின் மிக அடிப்படையான அம்சமாக தேர்தல் ஆணையர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையாகும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, இந்திய தலைமை நீதிபதியை குழுவிலிருந்து நீக்கியதன் மூலம், மோடி அரசாங்கம் நமது தேர்தல் செயல்முறையின் நேர்மை குறித்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் நமது தேசத்தின் தலைவர்களின் கொள்கைகளைப் பாதுகாப்பதும், அரசாங்கத்தை பொறுப்பாக வைப்பதும் எனது கடமையாகும். புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் முடிவெடுத்தது அவமரியாதைக்குரியது. மேலும் இது மரியாதையற்றது. இந்தக் குழுவின் அமைப்பும், செயல்முறையும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் விசாரிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.