
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. அண்மையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோருக்கு தவெக கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.
முன்னதாக, கடந்தாண்டு நடைபெற்ற தவெக மாநாட்டின் போது, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று விஜய் கூறியிருந்தார். ஆனாலும், இதுவரை எந்தவித கட்சியும் அதிகாரப்பூர்வமாக தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் முஸ்தபா, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து தவெக தலைமையிலான கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில கட்சி, மட்டுமல்ல தேசிய கட்சிகளில் கூட இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது கிடையாது. சிஏஏ சட்டத்தை திரும்பபெற வேண்டும் எனக் கூறி இஸ்லாமியர்களின் பக்கம் நின்றவர் விஜய். தவெகவில் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறார் அக்கட்சித் தலைவர் விஜய். தவெகவுக்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது. அற்ப செயல்களில் ஈடுபடுவதை திமுக நிறுத்திக்கொள்வது நல்லது. வாக்கு வங்கிக்காக சிலர் மூலம் இஸ்லாமியர்களை திசை திருப்ப திமுக சதி செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.