
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் மேடையில் பேசியதாவது... 57 சதவிகிதம் மக்களால் நேசிக்கப்படுகின்ற முதலமைச்சர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் நம் முதலமைச்சர், இதில் 17 சதவிகிதம் நம் கல்வியின் நேசிப்பால் பெற்றுள்ளார், இது குறித்து மக்களிடம் நீதி கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்னொரு மொழிப் போருக்கு நாம் தயாராகி வருகிறோம். நடராஜன் தாளமுத்து, ஆகியோர்கள் மீண்டும் உயிர்த்தெழுதல் போன்ற நிகழ்வு தற்சமயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் ஒன்றிய அமைச்சர் சொல்லுகிறார் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என கூறுகிறார். பொழுது போகவில்லை என்று எழுதக்கூடிய அரசியல் சாசனம் இல்லை இது, அம்பேத்கர் சாசனத்தில் மும்மொழி கொள்கை பற்றி எழுதப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கும், சர்வ சிக்ஷா அபியன் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, நடிகர் அஜித் படத்தில் வருவது போல ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் தான் ஆட்டோ ஓடும் என்பது போல் இருக்கிறது.
ஒருவர் வெளிநாட்டில் ஆங்கில படிக்க சென்றார், வாயை திறந்தாலே அவர் பொய்ய தான் சொல்லுகிறார்.இங்கு ஆண்ட கட்சி ஆளுகின்ற கட்சி, ஆளப்போகின்ற கட்சி, எதுவாக இருந்தாலும் ஒன்றிய பாஜக மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 20151 கோடி ரூபாய் தராமல் இருக்கிறார்கள், இன்று நாங்கள் கேட்கிறோம் இது உங்கள் அப்பன் வீட்டு பணமா, 40 லட்சம் பிள்ளைகளின் எதிர்காலம் இதில் உள்ளது. தர்மேந்திரா பிரதான் ஒரு கட்டுரை எழுதுகிறார் தேசிய கல்விக் கொள்கையை ஒத்துக்கொள்கிறோம் என எழுதி கொடுங்கள் என ஒரு கட்டுரை எழுதி இருந்தார், அதற்கு முதல்வர் பல்வேறு கண்டங்களை தெரிவித்து இருந்தார்
நீங்கள் இந்தியாவில் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இங்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை ஏமாற்ற ஒருவன் பிறந்து தான் வர வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவிலேயே மொழிக்காக உயிர் தியாகம் செய்த மொழி தமிழ்நாடு தான் என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். துணை முதலமைச்சர் நீட் சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் சொல்லாமல் இன்று வரை இருக்கிறது. 43 லட்சம் அரசு பிள்ளைகளுக்காக தான் இந்த பணத்தை நாம் கேட்கிறோம், இதற்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.