
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று (17.02.2025) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அதிமுகவின் ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளராக ஆர்.பி. உதயகுமார் இருந்தபோது, மருத்துவர் வெங்கடேசன், ‘ஓ.பி. ரவிந்திரநாத் அல்லது ஜெயபிரதிப் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமிக்கலாம்’ என்று தெரிவித்தார். இது தொடர்பாக நான் வெங்கடேசனைச் சந்தித்தபோது அவர் எந்த சோபாவில் அமர்ந்திருந்தார்.
உதயகுமார் எந்த நிலையில் இருந்தார் என்பதைக் கண்கூடாகப் பார்த்தவன் நான். அதனைச் சொன்னால் அரசியல் நாகரிகமாக இருக்காது. வாரிசு அரசியல் காரணமாக என் மகன்களை மாவட்டச் செயலாளராக ஆக்க வேண்டாம் என்றேன். அதன் பிறகு ஜெயலலிதா தான் அந்தப் பதவியை ஆர்.பி. உதயகுமாருக்குக் கொடுத்தார். எனவே ஆர்.பி. உதயகுமார் இனி எங்களைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஜெயலலிதா எனக்கு (ஓ.பன்னீர்செல்வம்) நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
ஜெயலலிதா இருந்த போது தேனி மாவட்டத்தில் இவர் தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, கடந்த 2010ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரைத் தள்ளி வைத்துவிட்டு, சாமானிய தொண்டனாகிய உதயகுமாரைத் தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். அன்று முதல் அவர் என்னென்ன நடவடிக்கைகளை தன் அதிகாரத்திற்குப் போட்டியாகவோ, இணையாகவோ, முன்னாலோ, பின்னாலோ எந்த வடிவத்திலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் எடுத்து வைத்த முயற்சிகள் எல்லாம் அவருடைய மனசாட்சிக்கே தெய்வ சாட்சியாக விட்டுவிடுகிறேன்.
அன்றைக்கு ஜெயலலிதா இருந்தபோது மருத்துவர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள் தயவு செய்து அதைச் சொல்லுங்கள். உங்கள் காலில் விழுந்து வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன். இந்த உண்மை உலகிற்குத் தெரியட்டும். உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதுதான் அதற்காக எந்த எல்லைக்கும் நீங்கள் போவீர்கள் என்பது தான் சமீப கால நடவடிக்கை.

உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் பிரச்சனை. இப்போது பிரச்சனை நீங்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான். நீங்கள் இப்போது நடத்துகிற இந்த செயலிலே இந்த உண்மை இருக்கிறது என்பதை அப்பாவி தொண்டர்கள் அறிய மாட்டார். ஏனென்றால் எங்களைப் போன்றவர்கள் அதை நன்றாக அறிவோம். அந்த அப்பாவி சாமானிய ஏழை எளிய தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இந்த உண்மை புரிய வேண்டும். இதை நான் சத்தியமாகத் தெய்வச் சாட்சியாகச் சொல்கிறேன் அத்தனையும் உண்மை" எனக் கூறியுள்ளார்.