
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு, இபிஸ் மற்றும் ஓபிஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அதன் பின்னர், நடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். தற்போது ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை நடத்தி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், ஓபிஎஸ் தலைமையில் நேற்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் பதவி இருக்காது, ஒருங்கிணைப்பாளர் பதவியை தான் கொண்டு வருவேன் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், “ஒரு காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அதிமுகவை, இன்று இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார். அதிமுக வெற்றி பெறக்கூடிய ரகசியம் என்னிடம் இருக்கிறது” என்று கூறினார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், ஓபிஎஸ் கூறியதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள். தேசியக் கல்வி கொள்கை மாதிரி நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் கேட்காமல் இதை கேட்கிறீர்கள். கொசுக்கள் பற்றி பேசுவதற்கு இதுவா நேரம்? அவர் தனக்கு ரகசியம் தெரியும் என்கிறார். ரகசியம் என்ற வார்த்தை வந்தாலே யாரோடு யார் தொடர்பு என்பது தெரியும். திமுகவோடு அவருக்கு தொடர்பு இருந்து அந்த நோய் தொற்றிவிட்டது. அதனால் தான், எனக்கு அந்த ரகசியம் தெரியும் என்கிறார். ரகசியம் தெரியும் என்றால் சொல்லுங்கள். ரகசியம் என்று சொல்லி, தொண்டர்களை ஏமாற்றுகிற வேலையை தான், நான்கு ஆண்டுக்கால மேலாக ஓபிஎஸும், அவரது வகையறாக்களும் செய்கிறார்கள். இது நிச்சயமாக தொண்டர்கள் மத்தியில் எடுபடப்போவது கிடையாது” என்று கூறினார்.