
பிரதமர் மோடி அண்மையில் அமெரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு கடத்திய போது விமானத்தில் அழைத்து வரப்பட்டவர்கள் பயணம் முழுவதும் கால்களில் சங்கிலி மாட்டியும், கைகளில் விலங்குகள் இட்டும் பயணித்தது தொடர்பாக எதுவும் பேசவில்லை எனக் கண்டனம் எழுந்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை விமர்சித்து விகடன் சார்பில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதற்காக விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் விகடன் தரப்பு, அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த விவகாரம் விவாத பொருளாக மாற விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் விஷாலும் அவரது கண்டனத்தை பதிவு செய்து மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமீபத்தில் நூற்றாண்டு பெருமை கொண்ட விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இணையதள பக்கத்தில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் நிகழ்வை ஒட்டி ஒரு சித்திரம் வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனங்கள் சில இடங்களில் இருந்து வெளிவந்தாலும் ஒன்றிய அரசு விகடன் இணையதளத்தையே முடக்கியது.
ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வலையை நசுக்குவதற்கு சமம். அதே வேளையில் திரைத்துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பைரசி போன்ற பிரச்சனைகளுக்கு தொடர்ந்து ஒன்றிய அரசை நாம் வலியுறுத்தி வந்தாலும் அதற்கு இதுவரை எந்த தீர்வு எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதே போல் நாட்டில் புழங்கும் பல்வேறு தவறான செயலிகள் மூலம் திரையில் சக நடிகர், நடிகைகள் மற்றும் மூத்த கலைஞர்கள் பற்றி தவறான செய்திகளை பொய்யாக பேசி பரப்புவதும், சமூகத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்டு இன்பம் காணும் ஒரு குறுகிய மனம் படைத்த கும்பலை கண்டறிந்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, விமர்சனம் குறித்து எடுக்கப்பட்ட வெகு வேகமாக நடவடிக்கை போல் நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறாக பரப்பி வருபவர்கள் மீதும் திரைப்படங்கள் பைரசி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பபட்டால் நன்றாக இருக்கும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.