Skip to main content

கல்வி நிறுவனங்களுக்கு தலைமைச் செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 18/02/2025 | Edited on 18/02/2025

 

Chief Secretary important instructions to educational institutions

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நேற்று (17.02.2025) நடைபெற்றது. இந்த கூட்டதில் இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனியார், அரசு பள்ளிகள் மற்றும உயர் கல்வி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் தகுந்த விதிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்படும். கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்றும் நிரந்தர) பணி நியமனம் செய்யும் முன் காவல்துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும்.

பணியாளர்கள் அனைவரும் "குழந்தை பாதுகாப்பு உறுதி மொழி ஆவணத்தில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்படும் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து ‘சுய பாதுகாப்பு கல்வி’ அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கவும். அவர்கள் உள்ள சூழலில், எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அறியவும். பிரச்னை ஏற்படும் சூழலில், எவ்வாறு, யாரிடம் உதவியை நாடுவது போன்றவற்றிக்கு இக்கல்வியானது உதவுகிறது. இதனை திறம்பட நடைமுறைப்படுத்த முதலில் நிபுணர்களால் கையேடு தயாரிக்கப்பட்டு, அவர்களால் முதன்மை பயிற்சியாளர்கள் தயார் செய்யப்படுவார்கள்.

அதன் பின்னர், முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்கள் இதனை குழந்தைகளுக்கு முழுமையாக கற்பிக்க வேண்டும். இப்பயிற்சி மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக்கபட வேண்டும். அனைத்து ஆசிரியர் பட்டய மற்றும் பட்டப்படிப்பு பாடத்திட்டங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பாடத்திட்டம் சேர்க்கப்படும். மேலும், அனைத்து ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போக்சோ வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்கள் பற்றி தொகுக்கவும் மற்றும் கண்காணிக்கவும். சம்பந்தப்பட்ட துறை அலுவலராக தொடர்பு அலுவலர் நியமிக்கப்படுவார்கள்.

Chief Secretary important instructions to educational institutions

மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்படவேண்டும். இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் பெண் உயர்கல்வி ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட வேண்டும். விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச் சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே முகாம்களில் தங்க நேரும் பட்சத்தில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்படவேண்டும். மாணவிகள் விடுதிகளுக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது. விடுதி பராமரிப்பு பணி பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 1098  மற்றும் 14417 ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கூடுதலாக அமைக்கப்படவேண்டும்.

பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தால் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளித்து அதன் விவரத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். புகார் அளிக்கும் மாணவன் மற்றும் மாணவியின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளிவரக்கூடாது. இதற்கு அந்த கல்வி நிலைய தலைமை ஆசிரியர் பொறுப்பாவார். ‘மாணவர் மனசு புகார் பெட்டி’ அனைத்து பள்ளிகளிலும் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும். அனைத்து திங்கட் கிழமைகளிலும், காலையில் நடக்கும் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்களும், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு, ‘மாணவர் மனசு புகார் பெட்டி’ மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவ - மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்படவேண்டும்.

தனிப்பட்ட புகார்கள் குறித்து அங்கு குறிப்பிடவே கூடாது. அனைத்து பள்ளிகளிலும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த அனைத்து பரிந்துரைகளையும் தனியார் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்