
மகிழ்வான குடும்பத்தையும், வலுவான நாட்டையும் கட்டமைப்பதில், இல்லத்தரசிகள் முக்கிய பங்கு வகிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சேலம் பெரிய வீராணம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த இல்லத்தரசியான புவனேஷ்வரி மீது மணி என்பவருக்குச் சொந்தமான தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில் சிக்கிய புவனேஷ்வரிக்கு தண்டுவட பாதிப்பு மற்றும் முன்நாக்கு துண்டானதுடன், 60 சதவீத உடற்குறைபாடு ஏற்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், ரூபாய் 4 லட்சத்து 86 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க, யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இழப்பீட்டை அதிகரித்து வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புவனேஷ்வரி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விபத்தால் பாதிக்கப்பட்ட புவனேஷ்வரிக்கு 14 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் என இழப்பீடு தொகையை உயர்த்தி நிர்ணயித்ததுடன், ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் 12 வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இல்லத்தரசியான புவனேஷ்வரியை குடும்பம் இழந்துள்ளதால், இழப்பீட்டை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது உத்தரவில், ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இல்லத்தரசிகளின் பங்கு முக்கியம். அவர் தலைமையிலான மகிழ்வான குடும்பமே நல்ல சமுதாயத்தை உருவாக்கி, நல்ல சமுதாயத்தை அமைத்து, நல்ல நாட்டைக் கட்டமைக்கும். அதனால் நாட்டைக் கட்டமைப்பதில், இல்லத்தரசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குடும்பத்தில் சம்பாதிக்கக்கூடிய ஒருவர் இறந்துவிட்டால், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில், ஒரு இல்லத்தரசி இறந்துவிட்டால் அந்த குடும்பத்தினர் எண்ணிலடங்காத துன்பத்திற்கு ஆளாவார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.