
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சிக்கு ஜல்ஜீவன் திட்டம் மூலம் சுமார் இரண்டு கோடியே எண்பத்து மூன்று லட்சம் மதிப்பில் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து எஸ்.பாறைப்பட்டி வரை சுமார் 8.5கி.மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு பாறைப்பட்டி தரைத்தள தொட்டி அமைக்கப்பட்டு பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கெண்டையம்பட்டி, கெப்புசோலைப்பட்டி, வண்ணம்பட்டி, பாறைப்பட்டி, இராமநாதபுரம், தாதனூர், ஆர்விஎஸ் கல்லூரி ஆகிய பகுதிகளுக்கு மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைத்து தனித்தனி மோட்டார் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதிய குடிதண்ணீர் திட்டத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்த பின்பு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது... ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரை பொதுமக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகைளயும் நிறைவேற்ற கூடியவர் நான். காரணம் நம்மிடம் கேட்டு அதை நிறைவேற்றக் கூடிய இடத்தில் நாம் உள்ளோம். அதனால் தான் நம்மிடம் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். சென்னைக்கு சென்றாலும், சென்னையில் இருந்து வந்தவுடன் ஆத்தூர் தொகுதி பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அதை நிறைவேற்றுவதை எனது கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். நான்கு வழிச்சாலைக்காக சாலைப்பணி ஆரம்பித்த போது நான் பாறைப்பட்டி ஊராட்சிக்கு வந்த குடிதண்ணீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் இதுகுறித்து என்னிடம் ஒரு கோரிக்கை கூட வைக்கவில்லை. காரணம் அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான்.
எப்படியும் நமக்கு தண்ணீர் கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தான் இன்று அவர்களுக்கு (பாறைப்பட்டி ஊராட்சி) ரூ.3கோடி மதிப்பில் தனி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு பாறைப்பட்டி ஊராட்சியில் உள்ள 6 கிராமங்களுக்கும் தனித்தனியாக மின் மோட்டார் மூலம் மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மின் மோட்டார் பழுதானாலோ குழாய்களில் உடைப்பு ஏற்பட்டாலோ அதை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து கொடுத்து குடிதண்ணீர் பிரச்சனை இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிலத்தடி நீரை பாதுகாக்க குளங்கள் மற்றும் ஓடைகள் தூர்வாரப்பட்டு அந்தந்த கிராம ஊராட்சியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து வர சிமிண்ட் வாய்க்கால் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மல்லையாபுரத்தில் இருந்து வரும் வாய்க்கால் தூர்வாரப்பட்டு மழைத்தண்ணீர் முறையாக வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரைஅனைத்து நலத்திட்டங்களும் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரை பொறுத்தவரை தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் அடித்தட்டு கிராம மக்களை சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று கூறினார்.