
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் இந்த குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சி பணிகள் மேற்கொள்ள மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார்.
அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, இளம் தலைமுறையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் பிப்ரவரி 24 ஆம் தேதி (24.02.2025 - திங்கட் கிழமை) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்துவது, கட்சிக்கு இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை விரைந்து முடிப்பதற்காகப் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.