
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்கும் பொழுது, தமிழக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க கூடாதா?” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்."இதற்கு எந்தத் தரவும் இல்லை" என்கிறார்கள் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையினர்.
பள்ளிக்கல்வித்துறையினர் தரப்பில் தெரிவித்திருப்பதாவது "அரசுப் பள்ளிக்கு ஒரு பாடத்திட்டம், தனியாருக்கு ஒரு பாடத்திட்டம் என்று இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான சீரான கல்வியைக் கொடுக்கும் உயரிய நோக்கத்தில், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தார் .தமிழ்நாட்டில் கட்டாய மொழித்திணிப்பை எதிர்க்கும் நமது அரசு, விரும்பி படிக்க எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. அவ்வகையில் தனியார் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயம் என்ற சூழல் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் : 58,000 அதில் தனியார் பள்ளிகள் சுமார் : 12,690இதில் சிபிஎஸ்சி பள்ளிகள் வெறும் : 1,835 இதில், சிபிஎஸ்சி பள்ளிகள் தவிரக் கட்டாய இந்தி பாடம் எங்கும் இல்லை. பிற தனியார் பள்ளிகளில் எந்தப் பொதுத் தேர்விலும் இந்தி கிடையாது .ஆக, தமிழ்நாட்டில் வெறும் 3.16 % பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயம் .
சிபிஎஸ்சி, பிற மாநிலங்களில் மாறிச் செல்ல வாய்ப்புள்ள குழந்தைகளுக்காக நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்ட திட்டம். எங்குச் சென்றாலும் ஒரே பாடத்திட்டத்தைத் தொடர உதவும். அதன் நோக்கம் வேறு. நிலை இவ்வாறு இருக்க, பல லட்சம் மாணவர்கள் இந்தி படிப்பதாக மனம் போன போக்கில் ஒரு தப்புக் கணக்கை உருவாக்கி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்று தவறான கருத்தைப் பரப்ப முயலுவது தவறு" என்கிறார்கள்.