சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சல் சிவாஜி (வயது 33). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தம்புச் செட்டி தெருவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி ஒன்றில் 397 கிராம் அளவிற்கு தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து 15 லட்சத்திற்கு மேல் நகைக்கடன் பெற்று உள்ளார். நகைக்கடன் பெற்றதில் இருந்து கடனுக்கு உரிய அசல் மற்றும் வட்டி கட்டாமலும் அடகு வைத்த நகைகளை மீட்காமலும் இருந்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வங்கி சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இவரது நகைகளை ஏலத்தில் விட முடிவு செய்து நகைகளை சோதனை செய்தபோது ஹர்சல் சிவாஜி அளித்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என அறிந்து வாங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோசடி சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் குருலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஹர்சல் சிவாஜி விடுதி ஒன்றில் தங்கி இருப்பது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ஹர்சல் சிவாஜி மேலும் இதே போன்று வங்கிகளில் போலி நகைகளை வைத்து சுமார் 18 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி சம்பவத்திற்கு ஹர்சல் சிவாஜிக்கு உதவியாக இருந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீசார் தேடி வருகின்றனர். போலி நகைகளை வைத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.