விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரின் மனைவி எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் சுதாகரன் நகர் கரிகாலன் நகரைச்சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரான இவரின் முதல் மனைவி சித்ரா(வயது 56). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துக்கொண்டு, அக்கம்பக்கத்தினருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நடராஜன் திருக்கோவிலூரில் இருக்கும் இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று திரும்பி வந்துள்ளார். அப்போது வீடு திறக்காமல் இருந்ததால் கதவை திறந்து உள்ளே சென்ற அவர் அதிர்ச்சியடைந்தார். அங்கே, ரத்த வெள்ளத்தில் சித்ராவின் உடல் எரிக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.
வட்டிக்கு கடன் கொடுத்து வந்ததால் கொடுக்கல் வாங்கல் தகராறில் இக்கொலை நடந்ததா? அல்லது நகை, பணத்திற்காக இக்கொலை நடந்ததா? என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்து பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.