விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம்- சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவர், சூரிய பிரபா என்ற பெயரில் பட்டாசுத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று வழக்கம்போல் இத்தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனம் ஒன்றில் பட்டாசு ஏற்றும்போது உராய்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.
இந்த வெடி விபத்தில், பட்டாசுத் தொழிற்சாலையின் அனைத்து அறைகளுக்கும் மளமளவென்று தீ பரவியதால், அந்த ஆலையின் சில கட்டிடங்கள் வெடித்துச் சிதறின. மூன்று அறைகள் தரைமட்டமானது. அங்கு பணியாற்றிய இருவர் பலியானார்கள். படுகாயமுற்ற 6 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து விரைந்த சாத்தூர் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளிலில் ஈடுபட்டனர். இவ்விபத்து குறித்து சாத்தூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்று இயங்கும் சூரிய பிரபா பட்டாசுத் தொழிற்சாலை, விதிமீறலாக ஃபேன்சி ரக பட்டாசுகளைத் தயாரித்து வந்ததாகவும், விதிகளுக்கு முரணாக அதிக அளவில் ஊழியர்களை ஈடுபடுத்தியதாகவும், அத்தொழிற்சாலையின் உரிமையாளர் பிரபாகரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், 10-வது வகுப்பில் படிப்பைத் தொடராமல் பட்டாசு வேலைக்குச் சென்ற மீனம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்ற சிறுவனை, விபத்து நடந்த இடத்தில் உறவினர்கள் தேடி வருகின்றனர். அபாயகரமான தொழில் பட்டியலில் உள்ள பட்டாசுத் தொழிலில் சிறுவர்களை ஈடுபடுத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.