Skip to main content

“மத உரிமை மற்றும் பொது நலனைவிட வாழ்வுரிமை உயர்ந்தது” - ஸ்ரீரங்கம் கோவில் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

"Right to life is higher than religious right and public welfare" - High Court opinion in Srirangam temple case


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வரும் ஜூலை மாதம் வரையில் நடத்த வேண்டிய விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்தப்பட உள்ளன என்பது குறித்து, மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மதத் தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு,  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ‘மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமையில்லை. ஆகம விதிகளின்படி விழாக்களை நடத்த வேண்டும்’ என மனுதாரர் ரங்கராஜன் வாதிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘மத உரிமை, பொது நலனைவிட வாழ்வுரிமை உயர்ந்தது. வாழ்வுரிமை முக்கியமானது. வாழ்வுரிமையைக் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட முடியாது’ எனத் தெரிவித்தார்.

 

அதேசமயம், வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகளை எப்படி நடத்துவது என்பது குறித்து, மதத் தலைவர்களுடன் கலந்து பேசி, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பொது சுகாதாரம் மற்றும் கரோனா தடுப்பு விதிகளில் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்