![Trichy central prison police case](http://image.nakkheeran.in/cdn/farfuture/yO_F8tPJRgXvB8PMVjs8T1Pm3VIY7buYCEj5Mw0xgKQ/1639735985/sites/default/files/inline-images/th-1_2444.jpg)
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,600க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த சிறையில் கைதிகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில், சிறை வார்டனாக பணியாற்றிவந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கிவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (15.12.2021) இரவு வீட்டில் இருந்த ராம்குமார், திடீரென எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். மயங்கி கிடந்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காவல்துறையினர் வழக்குப் பதிந்து முதற்கட்ட விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் கூடுதல் விசாரணை நடத்திவருகின்றனர்.