" இரவு 1.30 மணிக்கு,பேருந்தை விட்டு இறங்கி என்னுடைய டூவீலரை ஸ்டார்ட் செய்ய எத்தனிக்கும் வேளையில், எங்கிருந்தோ வந்த நால்வர் வண்டியை இடித்து, என்னைக் கத்தியால் குத்தி கீழேத் தள்ளி விட்டு "ஹால் மார்க் " முத்திரைக்காக நான் மதுரைக்குக் கொண்டு சென்ற 590 கிராம்+160கிராம் என மொத்தமாக 750 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டனர்." எனக் கூறி வியாழக்கிழமை அதிகாலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார் காரைக்குடி சங்கந்திடல் பகுதியினை சேர்ந்த சரவணன்.
காரைக்குடி தெற்கு காவல்நிலையமும், மருத்துவமனையில் அட்மிட்டான சரவணனின் வாக்குமூலத்தோடு, அந்த நகைக்கு உரியவரான நகைக்கடை அதிபர் சண்முகத்திடம் புகாரை வாங்கி, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.ஜெயச்சந்திரன் அறிவுரையின் கீழ், காரைக்குடி காவல்துறை துணைச்சரக டி.எஸ்.பி.கார்த்திக்கேயன் தலைமையில் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன் டீம் சிரமமேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தேடியிருக்கின்றது. " கத்திக்குத்துப் பட்ட சரவணனின் காயத்தையும், முன்னுக்குப் பின் முரணாக அவன் கூறிய வார்த்தைகளும் சந்தேகத்தை அவன் பக்கமே திருப்பியது. இருப்பினும் அவனுடைய போன் அழைப்புக்களும், அவனுக்கு இருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளும் எங்களுக்குத் தெரியவர தீவிரமாக விசாரிக்க அவனே தன்னுடைய உறவினர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து நாடகமாடி கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். அதனால் அவனுடன் பேச்சிமுத்து, சுப்பிரமணி, முருகன் மற்றும் வடமாநில இளைஞர் விக்ரம் சிங் உள்பட 5 பேரை கைது செய்து, 12 மணி நேரத்தில் நகைகளை மீட்டோம்." என வெள்ளிக்கிழமை நண்பகலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பெருமைப்பட்டது காரைக்குடி காவல்துறை துணைச்சரகம். ஆனால், மீட்பு நகையாக காண்பித்தது 590 கிராம் மட்டுமே..!
நாடகமாடி நகைகளை கொள்ளையடித்தது என கொள்ளைக்காரனான சரவணன் வாக்குமூலம் கொடுத்தது 750 கிராம் தங்க நகைகள். மீட்டதாக காவல்துறையினர் காண்பித்தது 590 கிராம் தங்க நகைகளே.!! மீதமுள்ள 190 கிராம் நகைகள் என்னவாயிற்று..? " ஏறக்குறைய 15 வருடமாக அவருடைய கடையில் வேலைப் பார்ப்பவன் இந்த சரவணன். நகைக்கடை அதிபர் கொடுத்த புகார் 590 கிராம் மட்டுமே.! அதைத் தான் கொள்ளையிலிருந்து மீட்டுக்கொடுத்தோம். ஏற்கனவே 160 கிராம் கொடுக்க வேண்டி இருந்ததால், இந்த நாடகக் கொள்ளையில் 590 கிராமோடு அதனை சேர்த்துள்ளான் சரவணன். இந்த 160 கிராம் நகைக் கணக்கு நகைக்கடை அதிபருக்கும், சரவணனனுக்கும் இடையே உள்ள விஷயம். இதுக்குறித்து நகைக்கடை அதிபர் புகார் கொடுத்தாலும் அதற்கும் காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்." என்றது காரைக்குடி காவல்துறை துணைச்சரகம். இதற்கிடையில், " புகார் கணக்கில்லாத அந்த நகைகளை நாங்களே வாங்கித் தருகின்றோம்." என காவல்துறையினர் சிலர் அந்த நகைக்கடை அதிபரிடம் டீலிங் நடத்தியது தனிக்கதை..!