![pudukottai incident... Minister's request to the Chief Minister to provide compensation!](http://image.nakkheeran.in/cdn/farfuture/qYhlg5JyEXoNqlFikI-87ZcDEM6fkydNwTzyOcGwoko/1607189976/sites/default/files/inline-images/th_343_0.jpg)
'புரெவி' புயலால் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கே.வி.எஸ் தெரு வெங்கடேசன் மகள் சுவேதா (வயது 13) மற்றும் நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருஞான சம்மந்தர் மகள் அஞ்சலி (வயது 17), ஆகிய இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு மின் விபத்துகளில் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அறிந்த ஆலங்குடி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன், சிறுமி சுவேதா வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியதுடன், சிறுமி குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையும் முன்வைத்தார்.
![pudukottai incident... Minister's request to the Chief Minister to provide compensation!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ANzg9XFORznN7-1Aoy1XC8RTilvCIjZ7qk52u87PxZM/1607190007/sites/default/files/inline-images/4645646.jpg)
இந்த நிலையில், இன்று சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரான அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கே.வி.எஸ். தெரு வெங்கடேசன் மகள் சுவேதா மற்றும் புதுக்கோட்டை தொகுதி நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருஞான சம்மந்தர் மகள் அஞ்சலி ஆகிய இருவரும் 4-ஆம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த இரு குடும்பத்திற்கும் கருணை கூர்ந்து முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கருணை அடிப்படையில் இழப்பீடு வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.