ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்து மின்வேலியில் சிக்கி பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
தாளவாடி மலைப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம்தான் பிரதான தொழிலாக உள்ளது. வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இக்கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து சேதப்படுத்துவது வழக்கம். யானைகளிடமிருந்து பயிர்களை காக்க ஒரு சில விவசாயிகள் மின்வேலி அமைத்துள்ளனர்.
இதில் நேற்று இரவு திகினாரை கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று அப்பகுதியில் உள்ள விவசாயி ரங்கசாமி என்பவரது விளைநிலமான தென்னந்தோப்பிற்குள் நுழைந்தது. அப்போது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி அந்த பெண் யானை துடிதுடித்து உயிரிழந்தது. இதுபற்றி தகவலறிந்த ஜீரகள்ளி பகுதி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது விவசாய மின் இணைப்பிலிருந்து உயரழுத்த மின்சாரம் எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சியதால் யானை உயிரிழந்தது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக வனத்துறையினர் விவசாயி ரங்கசாமியிடம் விசாரணை மேற்கொண்டதில் மின்சாரம் பாய்ச்சியதை அவர் ஒப்புக்கொண்டார். யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் பிரேதப்பரிசோதனை செய்தபின் யானையின் உடல் அப்பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. இறந்த யானைக்கு 25 வயது இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் வனத்துறையினர் ரங்கசாமி மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்களை காப்பாற்ற மின் வேலி அமைப்பதும் அதில் சிக்கி யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் பரிதாபமாக உயிரை விடுவதும் வழக்கமாகி விட்டது.