நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நெல்லை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எஸ்.வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரீகமான கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிந்திருந்தது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை போலீஸ் தன்னை கைது செய்யலாம் என்ற நிலையில், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு அவர் தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அவரது மனு விசாரணைக்கு வந்த நிலையில், சேகருக்கு முன்ஜாமின் வழங்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது நெல்லை ஜெ.எம்-1 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இன்று எஸ்.வி.சேகர் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து அடுத்த மாதம் ஜூலை 12-ந் தேதி எஸ்.வி.சேகர் நெல்லை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டார். அவ்வாறு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.