பொள்ளாச்சி அருகே கருக்கலைப்புகாக போடப்பட்ட ஊசியால் ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலி ஆயுர்வேத மருத்துவர் மீதும் அவரது மகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
நெகமம் மேட்டுவாவி அரிஜன காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான செல்வராஜ் என்பவரின் மனைவி வனிதாமணி, 5 மாத கர்ப்பிணி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் இனி குழந்தை வேண்டாம் என கருதி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தனர்.
![A life-threatening abortion needle ... police looking for Ayurveda doctor](http://image.nakkheeran.in/cdn/farfuture/1FtescBMOuDI6Y7o16Q8i4pGbStuYd3FpTNtnI3j2N4/1556639515/sites/default/files/inline-images/asdsdsd_2.jpg)
இதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகள் கொடுத்து மருத்துவ ஆலோசனைகள் பெறும் ஆரம்ப சுகாதார நிலையதிற்கு சென்றபோது கருக்கலைப்பு செய்யமுடியாது என செவிலியர்கள் இவரை இரு முறை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 5 மாதம் வளர்ந்துவிட்ட கருவை அரசு மருத்துவமனைக்கு சென்றால் கலைக்க முடியாது என்று எண்ணிய வனிதாமணி தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய நினைத்து வடசித்தூர் சிஎம் நகரில் உள்ள ஒரு தனியார் ஆயுர்வேதிக் சென்டருக்கு சென்றுள்ளார்.
![A life-threatening abortion needle ... police looking for Ayurveda doctor](http://image.nakkheeran.in/cdn/farfuture/pAdvJUuA9xE_zi0RJsYpYkk1gGBOfhDBPuWFQPsQ4pg/1556639534/sites/default/files/inline-images/adsdsdsdssdsdsd.jpg)
இதன்தொடர்ச்சியாக ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியும், அவரது மகன் கார்த்திக்கும் வனிதாமணியின் வீட்டிற்கே சென்று கருக்கலைப்புக்கு ஊசி செலுத்தி உள்ளனர். ஊசி செலுத்திய அடுத்த சில நிமிடங்களில் வனிதாமணி உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அதனை அடுத்து உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து கார்த்திக்கும் ஆயுர்வேத மருத்துவர் எனக் கூறப்படும் முத்துலட்சுமியும் தலைமறைவாகினர்.
![A life-threatening abortion needle ... police looking for Ayurveda doctor](http://image.nakkheeran.in/cdn/farfuture/UrIzIKCpQrLmDI7w1UjAMNLpZFkGi4KIKvJgiC2DGR8/1556639610/sites/default/files/inline-images/asdsdsdda_0.jpg)
இது தொடர்பாக வானிதமணியின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 314 படி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியையும், கார்த்திக்கையும் தேடி வருகின்றனர்.
![A life-threatening abortion needle ... police looking for Ayurveda doctor](http://image.nakkheeran.in/cdn/farfuture/5vCUCRSL-9yTAFqcxeuzcTWa4wHvxGPfaxZu_zxFdLY/1556639631/sites/default/files/inline-images/adsds_0.jpg)
அதேபோல் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனரிடமிருந்தும் முத்துலட்சுமி கார்த்திக் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் முத்துலட்சுமி போலி மருத்துவர் என்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.