அரசு மருத்துவக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக முறைகேடுகள் காரணமாக, சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியையும், பல் மருத்துவக் கல்லூரியையும், அரசு கல்லூரிகளாக அறிவித்தும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அத்துடன் அரசு மருத்துவக் கல்லூரி நிர்ணயித்த கட்டணத்தையே, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டது தமிழக அரசு. இக்கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக இணைப்புபெற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக இணைப்பு பெற தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரகம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தும்படி, இரு கல்லூரிகளும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், அரசு கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இரு கல்லூரிகளுக்கும் தேர்வு நடத்தும்படி, தமிழக அரசுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, விசாரணையை கோடை விடுமுறைக்குப் பின் தள்ளிவைத்தது.