கஜா புயல் தாக்கிய 16.11.18 அன்று காலை 6.30 முதல் மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நிவாரண பணிகளை செய்து வருகிறார்.
அவருடன் மஜக பேரிடர் மீட்பு குழுவும் உடன் சென்றது. கலெக்டரை சந்தித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான பகுதிகளுக்கு காரில் செல்ல முடியவில்லை என்பதால், இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.
மதியம் நாகூரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றார். அதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், அம்ர்தா நகர் பகுதிக்கு சென்று அங்கு உள்ள மக்களை சந்தித்து புயல் பாதிப்புகளை கேட்டறிந்தேன். அடுத்து சம்பா தோட்டத்துக்கு வருகை தந்து அங்குள்ள மக்களை சந்தித்து தேவைகளை கேட்டறிந்தேன்.
ஆங்காங்கே நாகூர் இளைஞர்கள் தன்னார்வத்தோடு மரங்களை வெட்டி அகற்றும் பணிகளை செய்து வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன்.
பிறகு பட்டினச்சேரிக்கு வந்து மீனவ மக்களுக்கு ஆறுதல் கூறினேன். அங்கு 380 படகுகளில் சுமார் 200 படகுகள் சேதமடைந்ததை அறிந்து அவற்றின் விபரங்களை சேகரித்துள்ளோம். இதுகுறித்து அரசுக்கு தெரிவிப்போம்.
நாகூர் மெயின் ரோட்டின் இருபுறமும் உள்ள கடைகளிலும் நின்றிருந்தவர்களை சந்தித்து பாதிப்பு குறித்து கேட்டறிந்தோம். வாட்ஸ் அப் மூலமும், நேரடியாகவும் அவ்வப்போது அதிகாரிகளிடம் விபரங்களை பகிர்ந்துக் கொண்டே மீட்பு பணிகளை செய்து வருகிறோம் என்றார்.