![chennai to tenkasi coronavirus positive lockdown village](http://image.nakkheeran.in/cdn/farfuture/9MEtc7RZQJQzNkdy1bosg89JsO-2_RXFb-Eah3gf9r4/1589772139/sites/default/files/inline-images/t1_11.jpg)
தென்காசி மாவட்டம் வி.கே. புதூரையடுத்த ராஜகோபாலப்பேரி கிராமத்தின் 32 வயது இளம்பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சென்னையில் கூலி வேலை பார்த்து வந்தவர். கிராமத்திலுள்ள தன் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தற்போதைய லாக்டவுண் காரணமாகச் சென்னையிலிருந்து குடும்பத்தோடு பைக்கில் கடந்த 13- ஆம் தேதியன்று ராஜகோபாலப்பேரிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
பின்பு அருகிலுள்ள சுரண்டையிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்குக் குடும்பத்துடன் சென்று தன் தந்தையைப் பார்த்திருக்கிறார். இதையறிந்த அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியதில், இளம் பெண்ணுக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
![chennai to tenkasi coronavirus positive lockdown village](http://image.nakkheeran.in/cdn/farfuture/8cGlHhCyY6ACrLGcoGDypvQ1C6FFp6TaEIAtPU1wyTA/1589772161/sites/default/files/inline-images/t2_13.jpg)
வீ.கே. புதூர் தாசில்தார் ஹரிஹரன், சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, மருத்துவ அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ராஜகோபாலப்பேரி பகுதி முழுவதையும் லாக் செய்து முடக்கியதோடு அங்கு கிருமிநாசினி போன்றவைகளையும் தெளிப்பதற்கான ஏற்பாட்டிலிருக்கிறார்கள். மேலும் அந்தப் பெண் சென்று வந்த தனியார் மருத்துவமனை ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தொற்றுப் பரவலையடுத்து வீ.கே. புதூர் தாலுகா முழுவதிலும் நேற்று முதல் 19- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்திருக்கிறார் மாவட்ட ஆட்சியரான அருண் சுந்தார் தயாளன். மேலும் ராஜகோபாலப்பேரி கிராமம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
![chennai to tenkasi coronavirus positive lockdown village](http://image.nakkheeran.in/cdn/farfuture/AznrM29k6adnhEdeysDtfdfqHDKabTsKCgpLJ6XhWEM/1589772183/sites/default/files/inline-images/t3_8.jpg)
இந்த முடக்க நாட்களில் அத்தியாவசியத் தேவைக்கான கடைகள் மட்டுமே இயங்கும். அத்துடன் வெளி மாநிலத்திலிருந்து வந்த 15 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்கிறார் தாசில்தார் ஹரிஹரன். வெளியிடத்துவாசிகளின் வரவால் கிராமம் மட்டுமல்ல தாலுகாவே முடக்கத்திலிருக்கிறது.