தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தற்போது தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அத்துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் விவாதத்தின் ஆரம்பத்தில் பேசிய அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறிப்பாக உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் திருவள்ளூரில் 250 கோடி செலவில் சிப்காட் அமைக்கப்படும் என்றும், 150 கோடி செலவில் 10 சிப்காட் தொழில் பூங்காக்கள் மேம்படுத்தப்படும் எனவும் கூறினார். மேலும் அயல்நாடு, வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க "தமிழ் பரப்புரை கழகம்" உருவாக்கப்படும் என்றும், மாணவர்கள் தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறிவு தேர்வு நடத்தி அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.