![Stabbed in 12 places; A young girl who lost of throbbing in the hospital premises; Terrible in Kerala](http://image.nakkheeran.in/cdn/farfuture/ClYy5mCoL-cawz1azxryQ8oz4tp-4GnQRJthHiN--xY/1689511271/sites/default/files/inline-images/a506.jpg)
மருத்துவமனையில் இளம்பெண் ஒருவரை இளைஞர் 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் லிஜியா. லிஜியாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவருடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முறையற்ற தொடர்பிருந்த மகேசை லிஜியா பிரிய முயன்றுள்ளார். இதற்கு மகேஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் லிஜியா அவரது தாயை உடல் நலக்குறைவு காரணமாக அங்கமாலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அப்பொழுது தாய்க்கு உதவியாக மருத்துவமனையில் லிஜியா தங்கியிருந்தபோது அங்குசென்ற மகேஷ் லிஜியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்ட நிலையில் மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லிஜியாவை பலமுறை குத்தியுள்ளார். உடனடியாக அங்கிருந்த மக்கள் அவரை மடக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் மகேஷ் கத்தியால் குத்த முயன்றார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையில் ஈடுபட்ட மகேஷ் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் 12 முறை லிஜியாவை மகேஷ் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. அண்மையில் கேரள மாநிலம் கொல்லத்தில் மருத்துவரை நோயாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.