முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி உயிரிழந்தார்.
இதனையடுத்து அருண் ஜெட்லியின் உடல் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருண் ஜெட்லியின் உடல் இன்று காலை 10.00 மணியளவில் தீன்தயாள் உபாத்யாய் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பல்வேறு மாநில முதல்வர்கள், பாஜகவின் மூத்த தலைவர்கள், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர். அருண் ஜெட்லியின் உடல் டெல்லி யமுனை நதிக்கரை அருகே உள்ள நிகம்போத் கட்டில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது. இறுதி சடங்கு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.