மகாராஷ்டிரா அரசு கடல் வழிச்சாலை இணைப்பு திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த பணிகளுக்கான ஒப்பந்தத்தை மகாராஷ்டிரா மாநில அரசு பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்திற்கு (RELIANCE INFRASTRUCTURE) வழங்கியது. இந்த ஒப்பந்தத்தில் மும்பையில் உள்ள வெர்சோவா-பாந்த்ரா (Versova-Bandra) கடல் வழிச்சாலை இணைப்புத் திட்டத்தை ஜூன் 24 ஆம் தேதியிலிருந்து 60 மாதங்களில் திட்டத்தை முடித்துக் கொடுப்பதாக உறுதியளித்து அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனம். மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு கழகம் (MAHARASHTRA STATE ROAD DEVELOPMENT CORPORATION LIMITED- MSRDC) என்று அழைக்கப்படும் இக்கழகத்திடம் இருந்து 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்ட ஒப்பந்தத்தை அனில் அம்பானி நிறுவனம் பெற்றது.
![MAHARASHTRA GOVERNMENT PUSH TO RELIANCE INFRASTRUCTURE ANIL AMBANI](http://image.nakkheeran.in/cdn/farfuture/k-dH6wKLYsjxR_esAXbT3ssbISU76UAJO3ou8PV6Ld8/1561783806/sites/default/files/inline-images/devendra-fadnavis.jpg)
இந்த சாலையின் மொத்த நீளம் 17 கிலோமீட்டர் ஆகும். வெர்சோவா-பாந்த்ரா கடல் வழிச்சாலை இணைப்பு திட்டத்தின் மூலம் மும்பை வாசிகளின் பயண நேரம் 90 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனம் கடனில் தத்தளிப்பதன் எதிரொலியாக, மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு கழகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது. அதில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும், அதற்குரிய திட்டப் பணிகள் முடிக்கப்படாவிட்டால், நிறுவனத்தின் சட்டப்படி நடவடிக்கை அல்லது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும், அனில் அம்பானியின் இன்ஃபிரா (RELIANCE INFRASTRUCTURE) நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.