![டெ](http://image.nakkheeran.in/cdn/farfuture/lQoS_IJPJmCw7DvmNR0qv-wg858bKZMxSlI6-3-Zb18/1541362236/sites/default/files/inline-images/teacher%20love.jpg)
பள்ளியில் படிக்கும் மாணவியை எப்படியாவது தனது காதல் வலையில் சிக்க வைக்க வேண்டும் என்று அவரின் வீட்டருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் துரத்தி துரத்தி காதலித்து பார்த்தார் ஆசிரியர். அப்படியும் தனது காதலை ஏற்காததால் ஆத்திரம் அடைந்து கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். அலறித்துடித்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் கர்னூல் நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் சங்கர். அப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த மாணவி ஆசிரியரின் காதலை ஏற்க தொடர்ந்து மறுத்து வந்ததால், ஆசிரியர் சங்கர் மாணவியின் வீடு அருகே வாடகைக்கு குடி சென்றார். அங்கிருந்தபடி மாணவிக்கு காதலை தெரிவித்துப்பார்த்தார். அப்படியும் சம்மதிக்கவில்லை. ஆசிரியரின் இந்த தொந்தரவு பற்றி பெற்றோரிடம் தெரிவித்தால் தன்னை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்று பயந்து மாணவி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதும், வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம், மது போதையில் சென்ற ஆசிரியர் சங்கர், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த சங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்தார். இதனால் அவர் அலறி துடித்தப்படி கீழே விழுந்தார். உடனே சங்கரும் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சங்கரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.