இந்தியாவில் கரோனா பெருந்தொற்று கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவிவந்த சூழலில், இதுகுறித்து நேற்று (17.03.2021) மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்து வரும் கரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக நிறுத்திட வேண்டும். இல்லையென்றால் நாடு முழுவதும் நாடு முழுவதும் கரோனா அலை ஏற்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மஹாராஷ்ட்ரா, குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் சில கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழலில், இந்தியாவிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் நேற்று ஒரே நாளில் 23,179 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்று குறித்து கவலை தெரிவித்துள்ள ப.சிதம்பரம், இந்தியாவில் குறைவான நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "ஒவ்வொரு நாளும் கரோனா நோய்த்தொற்றின் விகிதம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து யாரேனும் சிந்திக்கிறீர்களா? 5.9 கோடி கரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இதுவரை 3 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன். தற்போதைய சூழலில் கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிக்கு இடையிலுள்ள போட்டியில் கரோனா வைரஸ்தான் மக்களை வெல்கிறது. மக்களுக்குத் தேவைக்கேற்ப கரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டும். கரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு போன்ற அதிகாரத்துவ தடைகளை விலக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.