Skip to main content

"கட்சியில சேருங்கன்னு அழைத்த காமராஜர்; ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கோன்னு சொன்ன அண்ணா..." - வைகோ பகிர்ந்த சுவாரசியம்

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

cvm

 

தமிழக அரசியலை தன் பேச்சால் இன்றளவும் கட்டிப் போட்டிருக்கும் வைகோ தன்னுடைய இளம் வயது முதலே அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். வைகோ பேசிக்கொண்டிருக்கிறார் என்றால் உறக்கத்தில் இருப்பவர்களும் எழுந்திருப்பார்கள் என்று அவரை அறிந்தோர் கூறுவார்கள். அத்தகைய பேச்சாற்றலுக்குச் சொந்தக்காரரான அவர் நம்முடைய நக்கீரன் சரித்திரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணாவுடனான தனது சந்திப்பு குறித்துப் பேசினார். 

 

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " 1964, ஆகஸ்ட் 15-ல ராஜாஜி ஹால்ல காமராஜர் மாணவர்கள சந்திச்சு பேசுறாரு. ஹாலுக்கு முன்னாடி பத்தாயிரம் மாணவர்கள திரட்டி வச்சு சுதந்திர தினத்த பத்தி பேசுறாரு. நெ.து.சுந்தரவடிவேலு வைஸ் சான்சிலர்.பிரசிடென்சி காலேஜ் பிரின்சிபல் பி.ஜி.எல். சுவாமி கிட்ட நல்ல பேச்சாளனா அனுப்பி வை, காமராஜர வரவேற்றும் நன்றி தெரிவிச்சும் பேசனும்னு சொல்றாரு. பிரசிடென்சி காலேஜ்ஜோட சிறந்த பேச்சாளனா நான் இருந்தேன். நான் போயி காமராஜர் முன்னாடி ஏழெட்டு நிமிசம் பேசிருப்பேன்.

 

மறுநாள் காலைல விக்டோரியா ஹாஸ்டல்ல என் அறைக்கு செவப்பா ஒருத்தர் வந்திருந்தாரு. " என் பேரு அஜீஸ். இளைஞர் காங்கிரஸ் தலைவர். நேற்று உங்க பேச்சு அவ்ளோ நல்லா அமைஞ்சது. தலைவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. தலைவர பாக்க வாங்க. கட்சில நல்ல இடத்துக்கு வரலாம்" அப்டினு சொன்னாரு. இல்லைங்க... நான் தி.மு.க.வோட ஐக்கியமாகி அண்ணா மேல பெரிய பற்றோட இருக்கேன். இப்படி நீங்க அழைச்சதே நான் பெரிய பெருமையா நினைக்கிறேன். நான் வர மாட்டேங்கனு சொல்லிட்டேன். அதுக்கு அவரு, "சரிங்க... சத்தியமூர்த்தி பவனுக்கும் சரி, இல்ல திருமலைப் பிள்ளை ரோடு வீட்டுக்கு வந்தாலும் சரி, தலைவர வந்து பாருங்கனு" சொல்லிட்டு போய்ட்டாரு. நான் சின்ன பையனா இருந்தப்போ காமராஜர் முதலமைச்சராகி தன்னோட முதல் சுற்றுப்பயணத்துல எங்க வீட்டுக்கு வந்திருக்காரு. வந்து சாப்பிட்டு ஓய்வெடுத்திருக்காரு.

 

அதுக்கு பிறகு பத்து நாள்ல கோகலே ஹால்ல இந்தி எதிர்ப்பு கருத்தரங்குல அண்ணா பேசினாரு. அண்ணாவுக்கு முன்னாடி நான் பேசினேன். அன்னிக்கு நைட் நுங்கம்பாக்கம் வீட்டுல அண்ணாவ சந்திக்க எல்.ஜி.பெ.சீனிவாசன், நா.வளவன்லாம் கூட்டிட்டு போனாங்க. அண்ணா என்கிட்ட, நல்லா பேசுனயா. எந்த ஊருனு கேட்டாரு. கலிங்கப்பட்டி, சங்கரன் கோவில் தாலுக்கால இருக்குனு சொன்னேன். அதன் பிறகு தி.மு.க. ஆட்சியப் பிடிச்சதுக்கப்புறம் சட்டக்கல்லூரி எலெக்சன் நடக்குது. நான் தி.மு.க. சார்பா போட்டி போடுறேன். கிருஷ்ணராஜ் வானவராயன் காங்கிரஸ் சார்பா நிக்கிறாரு. கொங்கு பெல்ட் ஓட்டு பூராம் அவருக்கு போயிடுச்சு. தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநில மாணவர்கள் யாரும் எனக்கு ஓட்டு போடல. நான் 80 ஓட்டுல தோத்துட்டேன். செக்ரட்ரிக்கு நின்ன ஜின்னா மும்முனைப் போட்டில ஜெயிச்சிட்டாரு. 

 

அதைத் தொடர்ந்து அண்ணாவ பார்க்க அவர் வீட்டுக்குப் போறோம். அப்பவும் நான் எந்த ஊரு, என்னனு கேட்டுட்டு, கவலைப் படாத, இதெல்லாம் ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கோ அப்டின்னு சொன்னாரு. அப்புறமா கேன்சர் ட்ரீட்மெண்ட் போயிட்டு வந்தப்றம் அண்ணாவ சந்திக்க நாங்க மாணவர்களெல்லாம் போனோம். அவர் மாடில ஒரு அறைல, ஒரு மூலைல ஜன்னலோரமா உட்காந்து இருந்தார். என்ன அப்படியே பார்த்தாரு. என் கைல பெர்ட்ரண்ட் ரஸலோட  ‘பவர்' அப்டிங்கிற புக் இருந்தது. அது என்ன புஸ்தகம்னு கேட்டாரு. ரஸலினுடைய பவர்னு சொன்னேன். அதுக்கு தலைய மட்டும் மெல்ல மேலயும் கீழயும் ஆட்டுனாரு. அதுதான் அவர சந்திச்ச அடுத்த சந்தர்ப்பம்" என்றார்.