திமுக சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த நெப்போலியன் சமீப காலமாக அரசியலைவிட்டு விலகி இருப்பதற்கான காரணத்தை நக்கீரனுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நெப்போலியன் அவ்வப்போது இந்தியா வந்து சில படங்களில் மட்டும் நடித்துவிட்டுச் செல்கிறார், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
நெப்போலியன் தனது கல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது. கல்லூரியில் படிப்பை முடித்தபோதே அரசியலில் திமுக மீது கொண்ட ஈடுபாட்டால் அப்போதே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2001இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார் நெப்போலியன். 2006 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். அப்போதைய அமைச்சரவையில் மத்திய சமூகநீதித்துறை இணையமைச்சராகவும் செயல்பட்டார். அதன்பிறகு அரசியலில் அதிகம் தென்படாமல் இருந்தவர், கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென்று திமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தான் அரசியலில் இருந்து விலகியது பற்றிக் குறிப்பிட்ட நெப்போலியன், "மத்திய அமைச்சரா இருக்குறப்போ நடிக்கக்கூடாதுனு விதி இருந்துச்சு, அதனால அப்போ நடிக்கலை. பிறகு கொஞ்சம் நடிக்க ஆரம்பிச்சேன். என் பசங்க அமெரிக்காவில படிக்கிறாங்க. அவங்களை கவனிச்சுக்கறதுக்காக அமெரிக்கா வந்தப்பறம் பசங்க என்ன நடிக்கவும் போகக்கூடாது அரசியலுக்கும் போகக்கூடாதுனு சொல்லிட்டாங்க" என்றவர் தொடர்ந்து, "இப்போ தான் நடிக்க அனுமதி கொடுத்திருக்காங்க" என்று சிரித்துக்கொண்டே கூறினார். "நீங்க அரசியலுக்குப் போனா அங்கயே இருந்துடுவீங்க; நாங்க இங்க ஒத்தையா இருக்கனும்னு சொன்னதால அரசியல்ல இருந்து ஒதுங்கிட்டேன்" என்று தெரிவித்தார். மேலும், “போதும்... ஒரு மனிதன் அரசியலில் என்னவெல்லாம் ஆசைப்பட முடியும்? ஒரு எம்.எல்.ஏவாகலாம், எம்.பி ஆகலாம் மிஞ்சிப் போனா மந்திரி ஆகலாம்னு ஆசைப்படலாம். தெரிஞ்சோ தெரியாமலோ இந்த மூனு வாய்ப்புமே கிடைச்சிருச்சு. இது போதும். இனி பிள்ளைகளுக்காக வாழ்வோம்” என்று கூறினார்.
நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள். மூத்த மகன் தனுஷிற்கு தசைவளக் குறைபாட்டு நோய் இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்து தற்போது அமெரிக்காவில் நலமுடன் இருக்கிறார். அதே குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் செய்து வருகிறார் நெப்போலியன்.