Skip to main content

நீட் தேர்வு நடத்த CBSEக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை! - வழக்கறிஞர் பாலு

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
neet


நீட் தேர்வுகள் எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் அண்டை மாநில மையங்களை நோக்கி வலுக்கட்டயமாக விரட்டப்பட்டார்கள். ஏனென்று கேட்டபோது கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பம் செய்ததுதான் என காரணம் சொல்கிறார்கள். 
 

இது தொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பாமக வழக்கறிஞர் பாலு பேசியது, 

"நிர்வாக கோளாறு, உச்சநீதிமன்ற தீர்ப்பு, அரசியல் தலையீடு, கையாலாகாத தனம் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தேர்வு எழுத காத்திருக்கும் மாணவனின் மனநிலை, அவர்கள் அனுபவிக்கக்கூடிய சூழல் ஆகியவற்றைப் பற்றி நாம் சித்தித்தோம் என்று சொன்னால் நாம் நம்முடைய நிம்மதியை இழந்துவிடுவோம். அந்த அளவிற்கு கொடுமை. தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு மாணவனை இப்படி அலைகழிப்பதும், வெளி மாநிலங்களில் தேர்வு மையத்தை ஒதுக்குவதும் மிகப்பெரிய கொடுமை. 

இயற்கை பேரிடர் நிகழும்போது செய்ய வேண்டிய காரியத்தை ஒரு நீட் தேர்வில் அரசாங்கம் செய்கிறது. அதனை மாணவர்கள் சந்திக்கிறார்கள் என்று சொன்னால் நாம் எங்கே வாழ்கிறோம்? எதற்காக இந்த அரசு? எதற்காக இந்த நீதிமன்றம்? எதற்காக இந்த ஊடகங்கள்? எதற்காக கல்வித்துறை? என்னுடைய கேள்வி, இந்த சூழலிலா ஒரு மாணவனை தேர்வு எழுத வைக்க வேண்டும்? எங்கே இருக்கிறது சமூக நீதி? 

தமிழகத்தின் மானம் போகுது. எல்லா மானத்தையும் வித்துட்டாங்க. பொதுவாக சி.பி.எஸ்.இ நீட் நுழைவுத்தேர்வுக்கு சி.பி.எஸ்.இ பள்ளிகள் தான் நடத்தனும் என்று எடுத்து இருக்க கூடிய முடிவு மிகப் பெரிய தவறு. நீட்டையே எதிர்க்கிறோம் அது வேற விஷயம். நீட் நடைமுறை இருக்க கூடிய காலத்துல போன வருடம் எத்தனை பேர் எழுதினார்கள், போன வருடம் தவறவிட்டவர்களும் இந்த வருடம் வருவார்கள், ஆகையால் கூடுதலாக இருக்கும் என்ற அடிப்படை அறிவு இருக்காதா?

சாதாரண ஒரு போலீஸ் தேர்வுக்கு 18 லட்சம் பேர் தமிழ்நாட்டில் அதற்கான தேர்வினை எழுதுகிறார்கள். எங்கே கோளாறு? யார் இதை கவனிக்க தவறினார்கள்? முதல் குற்றவாளி சிபிஎஸ்இ. இரண்டாவது குற்றவாளி அதை கவனிக்க தவறிய தமிழக அரசு. மிக அதிகமான மாணவர்கள் படிக்கக் கூடிய மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மையங்களை ஏன் தவறவிட்டார்கள்? சிபிஎஸ்இ அறிவிப்பில் வெளியிடப்பட்ட இந்த இரண்டு மையங்கள் எந்த காரணத்திற்காக நிறுத்தப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்ட மாணவர்களுக்குத்தான் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

எத்தனை விண்ணப்பங்கள் வந்திருக்கிறது, அதற்கு எத்தனை தேர்வு மையங்கள் வேண்டும் என்று நினைப்பதுதான், அதைப்பற்றி யோசித்து முடிவு எடுப்பதுதான் ஒரு சிறந்த நிர்வாகம். சிபிஎஸ்இ டைரக்டரை இந்த நிமிடம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இந்த தேர்வை நடத்துவதற்கு முற்றிலும் தகுதி அற்றவர். ஒரு சாதாரண ஓ.ஏ.வுக்கு உள்ள தகுதி கூட அந்த டைரக்டருக்கு இல்லை. அவர் வீட்டு பிள்ளை மொழி தெரியாத மாநிலத்தில் ஏதோ ஒரு இடத்தில் அலைக்கழிக்கப்பட்டால் என்ன செய்வார். 


 

k.balu pmk



இதை விட ஒரு துரோகம், இதை விட ஒரு கையாளாகாததனம் எதுவும் கிடையாது. இப்படி மாணவர்களை சித்ரவதை செய்ததற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறது. ஒரு மாணவன் தேர்வு எழுத செல்கிறான் என்றால், அவன் எங்கே எழுதுகிறான், எங்கே உட்காருகிறான், எப்படி எழுதுகிறான் என்று பார்த்து செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பது அரசாங்கம். 

1400 ரூபாய் பணம் கட்டுகிறான் மாணவன். அதற்கு நீங்கள் என்ன தருகிறீர்கள்? ஒரே ஒரு ஓ.எம்.ஆர். சீட் தருகிறீர்கள். வேறு என்ன தருகிறீர்கள்? எதற்காக எர்ணாகுளம் செல்ல வேண்டும்? என்ன அவசியம்? நீட் தேர்வு என்பது எல்லா மாணவர்களுக்கும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டும் அல்ல. 

தமிழகத்தில் மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு கொடுங்கள் என்று சென்னை ஐகோர்ட் சொன்னது. ஆனால் எத்தனை மாணவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அப்போது தமிழக அரசு என்ன செய்ய வேண்டும். எங்களிடம் நிறைய மாணவர்கள் புகார் அளிக்கிறார்கள். தமிழகத்திலேயே தேர்வு வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. 

சிபிஎஸ்இ என்ன செய்தது, உச்சநீதிமன்றம் சென்றது. டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்பதற்காக பல லட்சங்களை கொடுத்து சீனியர் வழக்கறிஞர்களை கொண்டு வாதாடியது தமிழக அரசு. இந்த நீட் தேர்வு விசயத்தில் தமிழக மாணவர்களுக்காக தமிழக அரசு என்ன செய்தது? ஒரு தனி நபர் ஒரு கோரிக்கையை வைக்கும்போது நீதிமன்றம் பார்க்கும் பார்வை வேறு. ஒரு அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் ஒரு கோரிக்கையை வைக்கும்போது நீதிமன்றம் பார்க்கும் பார்வை வேறு. அதை செய்ய தவறியது தமிழக அரசு. நம்ம மாணவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளிமாநிலத்திற்கு எழுத போகிறார்களே என்ற பதட்டம் கொஞ்சம் கூட தமிழக அரசுக்கு வரவில்லை. சிபிஎஸ்இக்கு நீட் தேர்வு நடத்த கொஞ்சம் கூட தகுதியே இல்லை."

சார்ந்த செய்திகள்