![Tangedco chief officer chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/YYz8URy-_zH0QvcCLl0Y09IRs2rD8yLaO98Bw2vFMTs/1590904426/sites/default/files/inline-images/CHC1_59.jpg)
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமைப் பொறியாளருக்கு எதிரான ஊழல் புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கில், சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த கே.ராஜூ தாக்கல் செய்த மனுவில், கடந்த 2008- ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாளராகச் சேர்ந்து, அதே துறையில் கள உதவியாளராகப் பதவி உயர்வைப் பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருகிறேன்.
திருச்சி மாவட்ட தலைமைப் பொறியாளராக உள்ள வளர்மதி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக, கைவிடப்பட்ட நிலங்களை அபகரித்து பினாமி பெயரில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தைக் கடுமையாக பாதித்த "தானே, வர்தா, ஒக்கி, கஜா" புயல் பாதிப்பின் போது, மின்தடம் சீரமைப்பு பணிகளில் திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மின்தடம் சீரமைப்பு பணிக்காக மத்திய- மாநில அரசுகள் ஒதுக்கிய கோடிக்கணக்கான ரூபாயில், ஒப்பந்த ஊழியருக்கு தினமும் 1000 ரூபாய் சம்பளம் என நிர்ணயித்து, அதற்கும் குறைவாகவே வழங்கப்பட்டது.
மேலும், நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது, 3-ல் 1 பங்கு கமிஷனாக பல்வேறு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. வளர்மதியின் மகன் விக்னேஷை ஒப்பந்ததாரராக நியமித்தும் ஊழலில் ஈடுபட்டுள்ளார். தவறுகளைத் தட்டிக்கேட்கும் அதிகாரிகளை பணி இடைநீக்கம் மற்றும் பணியிடமாற்றம் செய்து வருகிறார். அதனால், இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் நேர்மையாக இருக்காது என்பதால், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும், தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன், 4 வாரத்தில் சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.