புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கோங்குடி கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்க்காக பணிகள் நடைபெற்று வருகிறது. அகட்டுமானப்பணியின் போது அடித்தளம் அமைப்பதற்க்காக நேற்று பள்ளம் தோண்டும் போது 150 கிலோ மதிக்கதக்க அம்மன் சிலை மற்றும் பீடம் கிடைத்தது. அந்த சிலைகளை அதிகாரிகள் வந்து மீட்டுச் சென்றனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் பள்ளம் தோண்ட ஆரம்பிக்கும் பொழுது உள்ளே இருந்து அம்மன் மற்றும் நடராஜர் சிலை உள்ளிட்ட 6 சிலைகள் மற்றும் பீடங்கள் கிடைத்துள்ளது. தோண்ட தோண்ட பழங்காலத்து ஐம்பொன் சிலைகள் கிடைப்பதால் ஜேசிபி எந்திரம் மூலம் அதன் அருகே உள்ள இடங்களிலும் தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அப்போது கழமையான கோயில் இருந்ததற்காண அடையாளமாக சுவர்கள் தெரிய தொடங்கியுள்ளது.
தகவலறிந்து வந்த டிஎஸ்பி கோகிலா, வட்டாட்சியர் சூரியபிரபு உள்ளிட்ட அதிகாரிகள் சிலைகளை பத்திரப்படுத்தி கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலைகள் தோண்டி எடுக்கப்பட்ட பகுதி மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருந்த இடம், இன்றளவும் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். எனவே எங்கள் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட சிலைகளை அரசு நடவடிக்கை மேற்க்கொண்டு சிலைகள் எடுத்த இடத்திலேயே ஒரு கோவில் கட்டி சிலைகளை அங்கேயே வைக்க வேண்டும் என்றனர்.
அதிகாரிகள் இந்த இடத்தில் கோவில் கட்டும் வரை அரசு பாதுகாப்போடு சிலைகளை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
தோண்ட தோண்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது.. பழமையான கட்டுமானமான சுவர்கள் காணப்படுகிறது. அதனால் அந்த இடத்தில் இன்னும் ஏராளமான சிலைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதாவது இந்த இடத்தில் பெரிய கோயில் இருந்து காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் மண்ணுக்கள் மறைந்திருக்க வேண்டும். தற்போது கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டும் போது சிலைகள் வெளிப்படுகிறது. சுவர்களும் அடையாளமாக உள்ளதால் தொல்லியல் துறை ஆய்வு செய்தால் அந்த கோயிலின் காலம் சிலைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். மேலும் அதே இடத்தில் கோயில் அமைத்து அங்கிருந்து எடுக்கப்பட்ட சிலைகளை மறுபடியும் வைக்க வேண்டும் என்றனர்.