சரஸ்வதிபூஜை, விஜயதசமி, நவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து அம்மனை வழிபடுவது வழக்கம். மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கும் இந்த நவராத்திரி விழா, முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மன் வழிபாடு, அடுத்த மூன்று நாட்கள் மஹாலட்சுமி வழிபாடு, இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு நடக்கும். பெண்களை போற்றி வணங்கும் இவ்விழாவில், ஒன்பது படிநிலைகள் அமைத்து தினசரி சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
நவராத்திரி விழா துவங்கியதையொட்டி கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் குருக்கள் சுந்தரமுருகன் ஏற்பாட்டில் பக்தர்கள் வீட்டில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். அதில் அஷ்டலட்சுமி, அஷ்ட பைரவர், குபேர லட்சுமி, கண்ணப்ப நாயனார் காட்சி, ராமர் பட்டாபிேஷகம், ஸ்ரீ ரங்கநாதர், தசாவதாரம், அர்த்தநாரீஸ்வரர், தம்பதி சமேதயர், பாற்கடல் திருமால், அறுபடை முருகன், விநாயகர், பூரணகும்ப கலசம், மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், பாலதிரிபுர சுந்தரி, பீஷ்மர் படுக்கை, வைகுண்டம் சொர்க்கவாசல் ஆகிய கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் மற்றும் குழந்தைகள் வழிபடுகின்றனர். இதுகுறித்து சுந்தர முருகன் குருக்கள் கூறுகையில், " 25 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி கொலு வைத்துள்ளோம். தினசரி மாலை 6:00 மணிக்கு, உலகை அச்சுறுத்தி வரும் கரோனா நோய் நம்மை விட்டு முற்றிலும் அகலவும், உலக நன்மை வேண்டியும் கொலு வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது" என்றார்.