![vPaddy procurement; The central panel examined the second day](http://image.nakkheeran.in/cdn/farfuture/NcGfgj_qF5WSr8-RVaO6F2ATlifKMW-L9fpN06nGSQM/1675921573/sites/default/files/inline-images/877_4.jpg)
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகிறது.
பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர்கள் உயரதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் செய்தனர். ஆய்வு செய்தது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் வந்த மத்தியக் குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஐந்து நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வுகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஆய்வுகள் நடத்தினர். ஆய்வில் நெல் மாதிரிகளை சீல் வைத்து அதை இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்கு சோதனை செய்து பின் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக நெல்லின் ஈரப்பதம் குறித்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 9 இடங்களில் மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள ரிஷியூர் பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்து வருகின்றனர். ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.