திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம், திருச்சி மாவட்ட அரசு இசைப் பள்ளி சார்பில் தமிழ்நாடு நாள் மற்றும் உலக இசை தினத்தை முன்னிட்டு நேற்று கலை விழா கொண்டாடப்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் திடலில் நடைபெற்ற இந்த கலை விழாவில் பார்த்தசாரதி, நீலகண்டன், நல்லுக்குமார், கார்த்தி ஆகிய கலைஞர்கள் தங்கள் கலைகளை அரங்கேற்றினர்.
இதனைத் தொடர்ந்து வலங்கைமான் வேல்முருகன் தலைமையில் ‘மக்களை பெரிதும் கவர்வது இயற்றமிழா, இசைத்தமிழா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் இயற்றமிழே என்ற தலைப்பில் காவியா சேகரன், ராஜபிரபா ஆகியோரும் இசைத்தமிழே என்ற தலைப்பில் பாலு கோவிந்தராசன், தமிழ் ஆகாஷ் ஆகியோரும் பேசினர். பின்னர் இளவழகன் கலை அருவி கலைக்கூடத்தின் கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.