![nambiyaru dam water oepning cm edappadi palaniswami order](http://image.nakkheeran.in/cdn/farfuture/T3YshYMWA_mQwJd8se5d7WPyJeVELOObn8wJwHh5MzM/1611406468/sites/default/files/inline-images/nam%20%281%29.jpg)
நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, பிசான பருவச் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நம்பியாறு நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதானக் கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்குப் பிசான பருவச் சாகுபடிக்கு 27/01/2021 முதல் 31/03/2021 வரை நாள்தோறும், வினாடிக்கு 60 கனஅடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீரைத் திறந்துவிடுமாறு நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் இராதாபுரம் வட்டங்களில் 1744.55 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசன நிலங்கள் பாசன வசதிப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.