![river](http://image.nakkheeran.in/cdn/farfuture/trN4W1JvA26WZB3mekVC3y09SCNL1VevWqqFfevTdsA/1595987595/sites/default/files/inline-images/354_3.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையத்தை சேர்ந்தவர் டாக்டர் சசிகுமார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அன்பரசி கச்சராபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி செய்து வருகிறார்.
இவர்கள் கச்சராபாளையத்தில் உள்ள அரசு குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பத்ம சரண் என்ற (12 வயது) மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மாமா பொன்னுவேல் மகள் காயத்ரி (வயது 16) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மாணவி காயத்ரி சம்பவத்தன்று துணி துவைப்பதற்காக அருகிலுள்ள பொட்டியம் ஆற்றுக்கு சென்றுள்ளார். அவருடன் பத்மசரணும் சென்றுள்ளார். காயத்ரி ஆற்றில் துணி துவைத்து கொண்டிருந்தார். துணி துவைக்கும் கவனத்தில் இருந்ததால் பக்கத்தில் தண்ணீரில் குளித்து கொண்டிருந்த பத்ம சரண் ஆழமான பகுதிக்கு சென்றதை காயத்ரி கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் பத்ம சரணை அருகில் காணவில்லை என்று காயத்ரி தேடியபோது, ஆழமான பகுதியில் உள்ள தண்ணீரில் பத்ம சரண் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற காயத்ரியும் தண்ணீரில் மூழ்கினார்.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு தண்ணீரில் குதித்து இருவரையும் மீட்டு கச்சராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுவன், சிறுமி இருவரும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறக்கும் சிறுவர் சிறுமியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இனி மழைக்காலம். ஆறு, குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பி இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தி உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.