![Cannabis brought in for sale to students; The gang is caught in the crosshairs](http://image.nakkheeran.in/cdn/farfuture/bAW2VS1qZUZl6og55MLzzSX-m6F_bbdqSiG8oPSl6iU/1732643058/sites/default/files/inline-images/a1613_0.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்பனை செய்ய ஆந்திராவிலிருந்து காரில் எடுத்து வந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் காவல் நிலையத்துக்கு அண்ணாமலைநகர் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கு ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்ற ரகசியத் தகவல் அண்ணாமலைநகர் காவல்துறையினருக்கு கிடைத்தது.
இதையடுத்து அண்ணாமலை நகர் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர்கள் மணிகண்டன், பிரகாஷ், மோகன்ராஜ், ஸ்ரீதர்,ரமணி, கலைக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை மாலை மாரியப்பா நகர்ப் பகுதியில் கண்காணித்த போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஆந்திரா பதிவெண் கொண்ட சொகுசு காரை சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது காரில் இருந்து சிதம்பரம் அருகேயுள்ள தில்லைநாயகபுரத்தை சேர்ந்த சிவா மகன் சிக்கோ என்கிற தமிழரசன்(22), ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த உதயபாஸ்கர் (60), சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்து என்கிற முத்துகிருஷ்ணன்(24), அதே தெருவைச் சேர்ந்த ஐயப்பன் மகன் டோலக் என்கிற வினோத்(21) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
![Cannabis brought in for sale to students; The gang is caught in the crosshairs](http://image.nakkheeran.in/cdn/farfuture/uUQmNbyY7AjnOszo6O-hr-ecd9AppHe-vEIOgYKxjXY/1732643094/sites/default/files/inline-images/a1614_1.jpg)
விசாரணையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 20 கிலோ, 300 கிராம் கஞ்சாவை காரில் எடுத்து வந்து, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அண்ணாமலை நகர், சிதம்பரம் பகுதியில் உள்ள இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது சிறைக்கு அனுப்பினர். மேலும் 20 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ 5 லட்சம் ஆகும். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிதம்பரம், அண்ணாமலை நகர்ப் பகுதி கஞ்சா விற்பனையாளர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.