![100 day work in municipalities .. Agricultural organizations in demanding](http://image.nakkheeran.in/cdn/farfuture/UxnMzaH6Om4orOoDprRC8PZTluM06LTqSM6Y5lKQl0Q/1601985871/sites/default/files/inline-images/cpm_13.jpg)
கிராமங்களில் வாழும் ஏழை, எளிய விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஆண்டுக்கு 100 நாட்களாவது வேலை கொடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விவசாய, தொழிலாளர் அமைப்புகள் போராடி இறுதியில் பெற்றதுதான், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்'. இந்தச் சட்டத்தின்படி சென்ற 2006ஆம் ஆண்டிலிருந்து 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் நடைமுறையில் இருக்கிறது.
கிராமப்புறங்கள் மட்டுமல்ல நகர்ப்புறங்களிலும், குறிப்பாக பேரூராட்சி பகுதிகளிலும் விவசாயத்தின் துணை தொழில்களை நம்பியும், கூலி வேலைக்குச் சென்று குடும்ப கஷ்டத்தைப் போக்கும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளது. ஆகவே, பேரூராட்சி பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து பல போராட்டங்களைச் செய்து வந்தது. மத்திய அரசும் பேரூராட்சிப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
இதைக் கண்டித்தும், உடனடியாக பேரூராட்சி பகுதிகளுக்கு நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் இத்திட்டத்தால் தமிழகத்தில் மட்டும் ஏழை எளிய மக்கள் 25 லட்சம் பேர் பயனடைவார்கள் எனக் கூறியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு முழுக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.
06.10.2020 அன்று, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சி முன்பு, இச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்களுக்காக பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை உடனே நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி கோஷமிட்டனர். பிறகு பேரூராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இதேபோல் இந்தியா முழுக்க இப்போராட்டம் நடைபெற்றது.