Skip to main content

ஸ்மார்ட் சிட்டியை ஆளும் கொள்ளையர்கள்...

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

smart bike

 

வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகள் தன் நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் என்றால் மக்களின் அன்றாட வாழ்வில் தேவைப்படும் அனைத்தும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கிடைக்க செய்வதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தொழிற்துறை, பாதுகாப்பு, வர்த்தகம், சமூக ஒற்றுமை, நல்வாழ்வு, குடியிருப்புகள், மின்சாரம், போக்குவரத்து இவை அனைத்தும் எளிய முறையில் மக்களுக்கு சென்றடைவதே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமாகும். அதில் சீனா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பெரும்பாலான நாடுகள் வெற்றியும் அடைந்தன. இதை பின்பற்றியே மத்திய அரசாங்கம் இந்தியாவிலும் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் முதற்கட்டமாக 100 நகரங்களைத் தேர்தெடுத்தது. 

 

ஏன் 100 மாவட்டங்களை மட்டும் தேர்வு செய்துள்ளது? நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மாவட்டங்களில் இது கால் சதவிகிதம் கூட இடம்பெறாது. அதிலும் தமிழகத்தில் வெறும் 11 மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 27 மாவட்டங்கள் என்ன பாவம் செய்தன என்று தெரியவில்லை. பல எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்விகள் எழுப்பியிருந்தன. 

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது அரசு கஜானாவில் பணம் இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். அதே சமயத்தில் கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் ஸ்மார்ட் பைக் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. முழு ஊரடங்கு நீக்கப்பட்டால் பொது போக்குவரத்துகளில் குறைந்த சதவீதத்தில் மட்டுமே மக்கள் பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வர போவதாகவும் அறிவித்திருந்தது.

 

ஐதராபாத்தில் இயங்கி வரும் PBS என்ற தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் பைக் எனும் EcoBike, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் டில்லி, ஐதராபாத், அமராவதி போன்ற நகரங்களைத் தொடர்ந்து சென்னையிலும் தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது ஸ்மார்ட் பைக் திட்டம் 78 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அண்ணா நகர், மெரினா போன்ற இடங்களில் சுமார் 500 ஸ்மார்ட் பைக்குகள் நடைமுறையில் உள்ளன.

 

ஆனால் சென்னையில் 500 ஸ்மார்ட் பைக்குகள் ஓடுகிறது என்பதையே நம்ப முடியவில்லை. காரணம், மேலே சொல்லக்கூடிய 78 ஸ்மார்ட் பைக் நிறுத்தங்களில் நாம் நேரில் சென்று பார்த்தோமேயானால், பைக்குகள் குறைவாகவே காணப்படும். அவற்றை மக்கள் தங்களின் பயன்பாட்டிற்கு எடுத்து சென்றிருக்கிறார்களா அல்லது பழுது பார்க்க நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதே தெரியவில்லை. 

 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி 1000க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் பைக்குகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் எலெக்ட்ரிக் பைக் என்று சொல்லக்கூடிய 500 எலெக்ட்ரிக் சைக்கிள்களும், Next Generation Bike என்று சொல்லக் கூடிய செயின் இல்லாமல் ஓடும் 500 சைக்கிள்களும் கொண்டுவர போவதாக அறிவிப்பு வெளியாகியது. அதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஷெனாய் நகர் அம்மா அரங்க வளாகத்தில் புதிய இ-பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட் பைக்கை மக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. அதற்கு சாட்சியாக ஸ்மார்ட் பைக் நிறுத்த நடைமேடையில் எப்போதுமே இந்த வாகனங்கள் நின்றுகொண்டேதான் இருக்கும்.

 

அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட் பைக்கை நடுத்தர குடும்பத்தினர் மட்டுமே பெரிதளவு பயன்படுத்தி வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் யாரும் இதை பயன்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இதைப்பற்றிய தெளிவான பார்வை கூட சாதாரண மக்களுக்குக் கிடையாது. நடுத்தர வர்கத்தினர் கூட உடற்பயிற்சிக்காக மட்டுமே இந்த ஸ்மார்ட் பைக்கைப் பயன்படுத்தி வருகிறார்களே தவிர, மற்ற பணி சார்ந்த வேலைகளுக்கும் பயன்படுத்துவதில்லை என்று ஸ்மார்ட் பைக் பாராமரிப்பாளர்கள்கூறுகின்றனர் .

 

ஸ்மார்ட் பைக்கின் பழைய கட்டண கொள்ளையும் புதிய கட்டண வேட்டையும்: 

 

முதல் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாயும், அதன் பிறகு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒன்பது ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். சந்தா முறை கட்டணத்தின் கீழ் ஒரு நாளுக்கு நாற்பத்தி ஒன்பது (49) ரூபாய், ஒரு மாத பயன்பாட்டிற்கு இருநூற்று நாற்பத்தி ஒன்பது (249) ரூபாய் மற்றும் மூன்று மாதத்திற்கு அறநூற்று  தொன்னூற்றி ஒன்பது (699)ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். பயன்பாட்டிற்கு பிறகு மிதிவண்டியை உரிய நேரத்தில் அதன் நிறுத்ததிற்கு கொண்டு வந்து சேர்க்கத் தவறினால் அபராத தொகையாக இருநூறு(200) ரூபாய் வசூலிக்கப்படும். 

 

தற்போது கொண்டுவர இருக்கும் ஸ்மார்ட் பைக்கிற்கு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என மக்களின் உழைப்பை வேட்டையாட காத்திருக்கிறது இந்த அரசு. அதே நேரத்தில் சாதாரண ஏழை மக்கள் பேருந்துகளில் நடத்துனரிடம் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்வது போல் எளிதானது அல்ல இந்த ஸ்மார்ட் பைக் பயணம்.  இதற்கு பல விதிமுறைகள் உள்ளன அதை பின்பற்றினால் மட்டுமே இதில் பயணம் செய்யமுடியும். அரசு ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் கிலோமீட்டர் என்ற கணக்கில் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையை துவங்குவார்கள். ஆனால் இந்த ஸ்மார்ட் பைக் திட்டம் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் பைக் சுமார் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும் என்று சொல்லப்படுகிறது.

 

சரி ஒரு சிறிய கணக்கை வகுத்து பார்ப்போம். சென்னை வாகன நெரிசலை கணக்கில் வைத்து இந்த வாகனத்தில் 30 கி.மீ. வேகத்தில் 10 கி.மீ. தூரம் பயணம் செய்தால் சரியாக ஒருமணி நேரம் கடக்கும். அதாவது நாம் 60 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இது சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொது பேருந்து கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சேகுவேரா