Skip to main content
Breaking News
Breaking

"அவர் வராமல் நான் தலைமை ஏற்பதற்கு வருந்துகிறேன்!" - கலங்கிய பேராசிரியர் 

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காலமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (07 மார்ச் 2020) அதிகாலை ஒரு மணி அளவில் அவர் காலமானார்.

 

kalaignar perasiriyar



மறைந்த அன்பழகன், கலைஞரின் நெடுங்கால நண்பராவார். பேரறிஞர் அண்ணாவால் திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கலைஞரின் மறைவு வரை இருவரும் இணைந்து செயலாற்றினர். "1942ஆம் ஆண்டில் அண்ணாவால் அறிமுகம் செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவராக இவரை நான் அறிந்தேன். நான் தொடங்கிய தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள வந்தார். அந்த விழாவிற்கு நான் அழைத்திருந்த பலர் வரவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த விழாவை நடத்தினோம். அன்று முதல் தொடர்கிறது எங்கள் நட்பு" என்று கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். வயதால் கலைஞரை விட மூத்தவரான அன்பழகன் கலைஞரின் தலைமையை ஏற்று அவருக்கு உறுதுணையாக செயல்பட்டவர்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கலைஞரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபொழுது திமுகவின் பொதுகுழுக்கூட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமையேற்று நடத்திய அன்பழகன், "கலைஞர் தலைமையேற்று நடத்தவேண்டிய இந்தக் கூட்டத்தை அவர் வராமல் நான் தலைமையேற்று நடத்தும் நிலை வந்ததற்காக மிகுந்த வருத்தப்படுகிறேன்" என்று கூறியே தனது பேச்சை தொடங்கினார். அந்தக் கூட்டத்தில்தான் ஸ்டாலின், செயல்தலைவராக அறிவிக்கப்பட்டு அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படி, சந்தித்து நண்பரான அன்றிலிருந்து இறுதிவரை பேராசிரியர், கலைஞரின் நண்பராக திராவிட இயக்கத்தின் செயல்வீரராக, தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் கொள்கைக்காகவும் இயக்கத்துக்காகவும் வாழ்ந்தார்.