![vijay antony about elon musk](http://image.nakkheeran.in/cdn/farfuture/2jFuLP3q5E8GgblIEafCJ96M0XFILYNsZ8gWOf-FX78/1689685492/sites/default/files/inline-images/40_50.jpg)
பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'கொலை'. 'இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. சிறப்பு விருந்தினராக ஆர்யா கலந்து கொண்டார்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/c6Goc4llCvRiUdMQFhULzBlPq7sf_K2X4z5TytHWqyY/1689685459/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29_10.jpg)
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, "பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது. கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் எனச் சொன்னார்கள். பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல. எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும். ஆனால், படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் பாலாஜி, எலான் மஸ்க் தங்கச்சியின் நண்பர் என்பதால் சீக்கிரம் எலான் நம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது. மீனாட்சி அடிப்படையில் மருத்துவர், இப்போது ஐஏஎஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யாவுக்கு நன்றி” என்றார்.
நடிகர் ஆர்யா பேசியதாவது, “இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம். நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒன்றைப் புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயமும் வித்தியாசமாகத் தான் இருக்கும்" என்றார்.