திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கடந்த ஆண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் தொடங்கப்பட்டது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களும், பதக்கங்களும் பெற விரும்பும் பொதுமக்களுக்காக முதல் முறையாக தொடங்கப்பட்டது. இந்த கிளப்பை நவீனப்படுத்த காவல்துறை கூடுதல் டிஜிபி அமல்ராஜ் முயற்சியால் திட்டமிடப்பட்டு சர்வதேச தரத்தில் ஒரே நேரத்தில் 20 பேர் பயிற்சி பெறும் வகையில் மிகப் பெரிய கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
மேலும் இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையொட்டி நேற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி கேர் கல்லூரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வெட்டுகள் மற்றும் திருச்சியில் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்வை தொடர்ந்து புதிய கட்டிடத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி அமல்ராஜ், தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேஷன் செயலாளர் சங்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
பயிற்சித் தளத்தில் டிஜிபி கூடுதல் டிஜிபி மற்றும் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு பார்த்தனர்.தற்போது திருச்சி ரைபிள் கிளப்பில் 180 ஆயுட்கால உறுப்பினர்கள் உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆயுட்கால உறுப்பினராக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகு 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் இங்கு சேர்ந்து பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சர்வதேச தரத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் கிளப்பை இளைஞர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் திருச்சியிலிருந்து வீரர்கள் கலந்து கொள்ள இந்த கிளப் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.