![admk minister duraikannu](http://image.nakkheeran.in/cdn/farfuture/8awprJuvm1n3Ug32Wp1eR6qFL_VMjbHaCHw8MfrTO2s/1604253508/sites/default/files/inline-images/Dadadadad_2.jpg)
கரோனா தொற்றால் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்தார். இது அதிமுகவினர் மற்றும் அவரது குடும்பத்தை கலங்க வைத்திருக்கிறது.
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை அடுத்துள்ள ராஜகிரியை சேர்ந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் தந்தை பெயர் ராசுபடையாச்சி. இவர் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ. வரை படித்தவர். படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்து பின்னர் அதிமுகவில் ஐக்கியமானார். வேளாண் விற்பனைக்கு தலைவராக இருந்துவந்தார். பாபநாசம் ஒன்றிய செயலாளராக இருந்தவருக்கு, தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த ரெங்கசாமி அமமுகவிற்கு சென்றதும், மா,செ பொறுப்பும் கிடைத்தது.
பாபநாசம் சட்டன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்றாலும், தஞ்சை தெற்கு மா.செ.வான வைத்திலிங்கத்தை மீறி அமைச்சராகவோ, ஆளுமையோ செலுத்தமுடியாத கையறுநிலையிலேயே இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார், அதேவேளையில் தொடர்ந்து அமைச்சராகவும், அதிகாரத்திலும் இருந்த வைத்தியலிங்கம் சொந்த தொகுதியிலேயே தொற்றதால் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எனும் ஜாக்பாட் அடித்தது.
தஞ்சை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க வின் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்துகொண்டு வைத்தியலிங்கத்திற்கு எதிரணியாக தனது சொந்த சமூகத்தவர்களை ஓரணியாக்கி அசைக்கமுடியாத சக்தியாக வளர்ந்து வந்தார்.
![admk minister duraikannu](/modules/blazyloading/images/loader.png)
அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு பானுமதி என்கிற மனைவியும் இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர், மூத்த மகன் சிவபாண்டியன் வேளாண்மைத் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகனான ஐய்யப்பன் (எ) சண்முகபிரபு, வெளிநாட்டில் இருந்தவர் தனது தந்தை அமைச்சரானதும் சொந்த ஊருக்கு வந்து தந்தையின் இலாகாவையும், லோக்கல் அரசியலையும் கவனித்துக்கொண்டு பல சர்ச்சையிலும் சிக்கி வந்தார். ஐயப்பனின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் துரைக்கண்ணுவிற்கு தலையில் கத்தியாகவே அமைந்தது. சமீபத்தில் ஐயப்பனுக்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளராக பொறுப்பு வழங்கினார்.
இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறந்த தகவலை தெரிந்து கொண்ட துரைக்கண்ணு, அவசர அவசரமா கடந்த 13 ம் தேதி காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்றார், அப்போது திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இறந்து போனார்.
இது குறித்து காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்," எங்கள் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதோடு அவருக்கு ஏராளமான இணை நோய்களும் இருப்பது தெரியவந்தது. அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரல் 90 சதவிகிதம் பாதித்துவிட்டது. அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடனே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது." என்று கூறியிருந்தனர். இந்த சூழலில் சிகிக்சை பலனின்றி இறந்துள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பு அதிமுகவினர் மத்தியில் பெருத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.