ஒகேனக்கல் அருகே தமாகா கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் விட்டுச்சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள நாடார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (52). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவராக இருந்தார். வீட்டில் சொந்தமாக கறவை மாடுகளை வளர்த்து வந்த அவர், தினமும் காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று பால் வியாபாரமும் செய்து வந்தார்.
நேற்று காலை 6.15 மணியளவில், பால் விற்பனையை முடித்துவிட்டு, ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகே, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக எதிரில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். தப்பிச்செல்ல முயன்றபோதும் விடாமல் துரத்திச்சென்று வெட்டி சாய்த்தனர்.
பென்னாகரம் டிஎஸ்பி ராஜ்குமார், ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கொல்லப்பட்ட கணேஷின் உறவினரான தங்கவேல் என்பவர்தான் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒகேனக்கல் ஆற்றுப்படுகைகளில் மணல் கடத்தியதை போலீசில் காட்டிக் கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே, கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ஒகேனக்கல் வனப்பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த மோட்டார் சைக்கிள்கள், கொலையாளிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட கணேஷின் மகன் ரமேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில், ''என் தந்தை கணேஷனுக்கு எதிரி பக்கத்து தோட்டக்காரன்தான். ஏற்கனவே போன் மூலம் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வந்தான். அதை இப்போது செய்து விட்டான். இதுபற்றி முன்பே எஸ்பி ஆபீசில் புகார் அளித்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவின் மூலம், போலீசாரின் அலட்சியம்தான் கணேஷை காவு வாங்கி விட்டதாகவும் அந்தப் பகுதியில் திடீர் சர்ச்சை எழுந்துள்ளது.